மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் அரசின் அன்னதான திட்டத்தின்படி தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு உணவு சாப்பிடச் சென்ற பழங்குடியின நரிக்குறவப் பெண் ஒருவர், தன்னை அனைவருடனும் சேர்ந்து உணவு சாப்பிடவிடாமல் அவமதித்துவிட்டனர் என்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
இந்தக் காணொளி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்ததை அடுத்து, அவமானப்படுத்தப்பட்டதாக முறையிட்ட பெண் உள்ளிட்ட பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்களுக்குத் தீபாவளி திருநாளை முன்னிட்டு வேட்டி சேலைகளையும் வழங்கினார். "திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது," என்றும் அமைச்சர் கூறினார்.