சென்னை: தீபாவளி பண்டிகையின் போது வெடிவிபத்தில் சிக்கி தீக்காயம் அடைபவா்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி சமயத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாள் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக சுகாதார அமைச்சு, பட்டாசு வெடிக்கும் முன்பு எந்தவொரு கிருமிநாசினியையும் பயன்படுத்தவேண்டாம் எனவும் காலணி அணிந்து திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கவும் பட்டாசு வெடித்த பின்பு கைகளைக் கழுவவும் வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி
இதற்கிடையே, தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெடிப்பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்றும் கட்டுப் பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

