சென்னை: தீபாவளியை முன்னிட்டு பணம், பரிசுப் பொருள்கள் லஞ்சமாகப் பெறப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவல கங்களில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் திடீர் சோதனைகளை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கிலான ரொக்கப்பணம், பரிசுப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் மதுக்கடைகளிலும் இந்தச் சோதனை நடந்தது.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் போக்குவரத்து அலுவலக முகவர்களிடமிருந்து ஏறத்தாழ 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலிசார் கூறியுள்ளனர்.
உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும் கடலூர் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார மதுக்கடைகளில் ஒரு லட்சத்து 23,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அத்துடன், ஓசூர், ராசிபுரம், காரைக்குடி, கோவில்பட்டி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை, வணிகவரித்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் பட்டாசு பெட்டிகள், பரிசுப் பொருட்கள், ரூ.20,000 பணம் ைகப்பற்றப்பட்டன. சோதனை நட வடிக்கை தொடர்கிறது.
7,000 மதுப்புட்டிகள் பறிமுதல்
இதற்கிடையே, விழுப்புரம் அருகே உள்ள மதுக்கடையில் கணக்கில் வராத ரூ.31,000 பணமும் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 7,000 மதுப்புட்டிகளையும் லஞ்ச ஒழிப்புப் போலிசார் பறிமுதல் செய்தனர்.