கோயம்புத்தூர்: பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களைக் கையகப்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் அங்குள்ள பெண் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
"எங்களது விவசாய நிலங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்கக் கூடாது. நிலத்தைக் கையகப்படுத்து வதற்காக அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை ரத்து செய்ய வேண்டும்," என ஆட்சியர் காலில் விழுந்து சில பெண் விவசாயிகள் வலியுறுத் திக் கேட்டுக்கொண்டனர்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆட்சியர் சமீரனுக்கு வயதில் மூத்தவர்கள் காலில் விழுகிறார்களே என பெரும் தர்மசங்கடமாகிப் போனது. உடனே, அவர்களைத் தூக்கிவிட்ட ஆட்சியர், மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
கோவை மாவட்டம், அவிநாசி அருகில் உள்ள அன்னூர், மேட்டுப் பாளையம் உள்ளிட்ட ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1,504 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க ஆட்சியர் சமீரன் மூலம் தமிழக தொழில் வளர்ச்சிக் கழ கத்தின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பெண் விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
மனுவில், "அன்னூர் சுற்று வட்டாரக் கிராமங்களில் வசிக்கும் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. விவசாயப் பணிகளை நம்பியே இங்குள்ள கூலித் தொழிலாளர்களும் பிழைத்து வருகின்றனர்.
"70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி எங்களின் மனதை இடியாய்த் தாக்கி நிலைகுலைய வைத்துள்ளது.
"விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். ஆனாலும், எந்த முறையான அரசு அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
"தொழில்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்டபூர்வ அறிவிப்பை வெளியிட ஆவன செய்யவேண்டும்," என்று பெண் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது; தொழில்பேட்டை திட்டம் ரத்து என சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண் விவசாயிகள்