புதுக்கோட்டை: தமிழகத்தில் சிலம்பப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் நூறு பேருக்கு தலா ரூ.1 லட்சத்தில் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலம்பத்தைக் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் கற்றுக்கொண்டால் 80 வயதிலும் இளமையோடு, சுறுசுறுப்போடு, உடல் வலிமையோடு இருக்கலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதுபோன்ற காரணங்களால்தான் தேசிய அளவிலான விளையாட்டுகள் பட்டியலில் சிலம்பமும் இடம்பெற்றுள்ளது என்றார்.
"பிற மாநிலங்களுக்கும் சிலம்பத்தைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சிலம்பத்தைப் பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்," என்றார் அமைச்சர் மெய்யநாதன்.