சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று முதல் வழக்கம்போல் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றுவதுடன், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு இனிப்பும் பூங்கொத்தும் கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது என்றும் தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்த பின்னர் முழு வீச்சில் வகுப்புகளை நடத்தலாம் என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஊரக உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

