பட்டாசு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என விற்பனையாளர்கள் கவலை
சென்னை: தடையை மீறி சரவெடிப் பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, அந்த உத்தரவை அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அதிக ஒலிகளை எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தனிநபர்களின் மகிழ்ச்சிக்காக நாடு முழுவதும் உள்ள முதியோர், சிறார்களின் உடல் நலத்தையும் உயிரையும் பாதிக்கக்கூடிய பட்டாசுகளை அனுமதிக்க இயலாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசும் தன் பங்குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'பேரியம் நைட்ரேட்' போன்ற ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், அதிக நேரம் வெடிக்கக் கூடிய சரவெடி பட்டாசுகள், அதிக சத்தம் எழுப்பக்கூடிய, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகள் ஆகியவற்றை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சாதாரண வகைப் பட்டாசுகளை வெடிக்க எந்தவிதத் தடையும் இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு பட்டாசு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
சிவகாசி, விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரப் பகுதிகளில் இம்முறை சுமார் 1,500 பட்டாசுக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி நன்கு கட்டுக்குள் வந்திருப்பதால் பட்டாசு விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் விலையில் பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்தன.
எனினும் விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அதன் ஊழியர்கள் பலரும் இம்முறை பட்டாசுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னையிலும் பட்டாசு விற்பனை மந்தமாகவே உள்ளது.

