செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
588adccd-62f3-4e2b-ad45-a30b4805c7d2
-

முத்தரசன்: ஆளுநர் மாளிகை, அரசுக்கு இடையே மோதல் போக்கு கூடாது

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை, மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் கொண்டிருந்தால் அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு, கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதல்வர் மக்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கையைக் குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியைப் பாதிக்கும் செயல் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, அணைப் பகுதியில் அனுமதி இன்றி தங்கியுள்ள கேரள அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறித்து மோதல்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக பொறியியலாளர்கள்தான் அண்மையில் தண்ணீர் திறந்துவிட்டதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கேரளா அதிகாரிகள்தான் அணையைத் திறந்தனர் என்று வெளியான தகவல் தவறானது என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முல்லைப் பெரியாறு அணை தொடர்பில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை முதல்வர் ஸ்டாலின் கேரளாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக சாடியுள்ளார்.

வரும் 6ஆம் தேதி சென்னையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வரும் 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி கண்ட அமமுக, உள்ளாட்சித் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஊராட்சி மன்ற இடங்களைப் பிடிக்கவில்லை. இந்நிலையில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

பட்டப்பகலில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையிடம் நகை பறித்த திருடன்

கோவை: பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் நகைகளைப் பறித்துச் சென்றவருக்கு கோவை போலிசார் வலைவீசி உள்ளனர். நேற்று முன்தினம் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை அன்புக்கரசி ஆசிரியர்களுக்கான அறையில் தனியாக இருந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க ஆடவர் திடீரென நுழைந்துள்ளார். பின்னர், கத்தி முனையில் அன்புக்கரசியை மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்றச் சொல்லி, அவற்றை பறித்துச் சென்றார். மொத்தம் பத்து பவுன் மதிப்புள்ள நகைகளை அன்புக்கரசி பறிகொடுத்துள்ளார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.