செய்திக்கொத்து

2 mins read
debdae9b-c5ce-47ce-802e-956fc6e72e69
-

அா்ச்சகா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை

சென்னை: அா்ச்சகா்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதியன்று மாதாந்திர ஊக்கத்தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். இந்தத் திட்டத்தின்கீழ் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் 9,860 பேர் பயன் அடைவார்கள் என்றும் அவர்களது பெயா்ப் பட்டியல் இந்து சமய அறநிலையத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் குமரகுருபரன் கூறியுள்ளார்.

கோயம்பேடு, வேளச்சேரி பாலம் திறப்பு

சென்னை: தலைநகர் சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.210 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து, 1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலங்களில் காரில் பயணம் செய்து பார்த்தார். இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

22 தீர்த்தங்களில் நீராட அனுமதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராட நேற்று முதல் பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கவும் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஆலயத்தில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்த நிலையில், இப்போதுதான் 22 தீர்த்தங்களிலும் நீராட அனுமதி கிடைத்துள்ளது.

சிறப்புப் பேருந்துகள் அறிமுகம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ேநற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2,491 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக வரும் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது

சென்னை: சைதாப்பேட்டையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியருக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள எல்லைப் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்பு இல்லை, அதற்கு மேலும் சில நாளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள அரசு செய்துவரும் இடையூறுகளை தமிழக அரசு கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. இதனைக் கண்டித்து அதிமுக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.