முதல்வர் வீட்டுக்கு குண்டு மிரட்டல்
சென்னை: சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு யாரோ ஒருவர், தொலைபேசி மூலம் அழைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து, போலிஸ் அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டைச் சுற்றி மோப்ப நாய்களுடன் சோதனை போட்டனர். சோதனையில் இது மிரட்டல் என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை போலிசார் கைது செய்தனர்.
கடலூரைச் சேர்ந்த 40 வயது பழனிவேல் என்ற அந்த ஆடவர், தங்கும் விடுதி ஒன்றில் வேலை செய்கிறார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சினிமா படத்தில், தான் பாடுவதற்கு ஆசைப்படுவதாகவும், இதற்காக அவரது கவனத்தை ஈர்க்க இதுபோன்ற மிரட்டல் செயலில் ஈடுபட்டதாகவும் பழனிவேல், போலிஸ் விசாரணையில் தெரிவித்தார்.
வேலூரில் 3,510 இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு வீடுகள்
வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்குக் குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று நடந்தது.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் இலங்கை அகதிகளுக்கு பல லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசுத்துறை உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து:
முக்குலத்தோர் புலிப்படை வரவேற்பு
சென்னை: வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் வரவேற்றுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது. இது வரவேற்கத் தக்கதாகும். அது உண்மையான சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றியாகும். வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று அந்த அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்.
உயிரிழந்த பெண் காவலர்
குடும்பத்திற்கு கூடுதல் நிவாரண நிதி
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கவிதா (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார். இதையடுத்து, பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இப்போது கூடுதலாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க தலைமைச்செயலகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

