செய்திக்கொத்து

2 mins read
e365504a-1b8c-48ba-a7f3-93559ad1f61a
-

பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக நினைவு நாணயம் வெளியீடு

லண்டன்: இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக இங்கிலாந்தில் சிறப்பு நினைவு நாணயம் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக், தீபாவளி அன்று நாணயத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியபோது, "நாணயத்தில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையும் காந்தியின் 'என் வாழ்க்கையே என் செய்தி' என்ற பொன்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது. இந்தியனான நான் தீபாவளியன்று இந்த நாணயத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று சொன்னார். தங்கம், வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாணயம் தீபாவளி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் விராச்சிலையில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் 50 வயது பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், 90 பேர் காயமடைந்ததை அடுத்து, போட்டியை நிறுத்தும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கண்ணாடி உடைப்பு; 13 பேர் கைது

கடலூர்: வடலூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி, அதனை கல்வீசி தாக்கி, பாமக பிரமுகர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காெணாளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசு வழங்கியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இம்மாதம் 1ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டம் வெடித்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இருந்து திருமாணிகுழி, குயிலாப்பாளையம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் பேருந்து மீது கல் வீசப்பட்டது தொடர்பாக நெல்லிக்குப்பம் பகுதியில் 13 பேரை கைதுசெய்துள்ள போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயிர் இழப்பீடு அறிவிக்க வலியுறுத்து

சென்னை: பருவமழை காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில விவசாயிகள் தங்களது நெல்மணிகள் மழை காரணமாக விற்பனைக்கு வருவதற்கு முன்பே முளைவிட ஆரம்பித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கிட்டு இழப்பீட்டுத்தொகையை உடனடியாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

"தமிழகத்தில் பருவமழை அதிகமாகப் பெய்து வருவதால் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்றவும் சரியான விலையில் வேளாண்மையில் ஈடுபடுேவாருக்கு உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு தகுதியில்லை'

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு தகுதியில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை என்றவர், 30 ஆண்டு கணக்கீட்டின்படி நவம்பர் 30ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என்றார்.