ராமநாதபுரம்: ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒரு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது போலவே, ஆட்டுக்கிடா சண்டை போட்டியை நடத்தவும் அனுமதி வழங்கவேண்டும் என்று ராமநாதபுரம் இளையர்கள் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக கிடா சண்டை, சேவல் சண்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. இப்போட்டிகளை நடத்த அரசு தடைவிதித்துள்ளது.
"தமிழகத்தில் பொங்கல் விழாவின்போது, பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதைப் போலவே, கிடா சண்டையும் கிராமங்களில் களைகட்டுவது வழக்கம். அதற்கும் ஏராள ரசிகர்கள் உள்ளனர்.
"ஜல்லிக்கட்டில் மனிதர்கள் காயமடைகின்றனர், உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கிடா சண்டை போட்டியில் அப்படி எந்தவொரு பெரிய ஆபத்தும் இல்லை. ஆகையால் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் போலவே வரும் பொங்கல் பண்டிகையின்போது கிடா சண்டைப் போட்டிகளையும் நடத்த தமிழக அரசு அனுமதிக்கவேண்டும்," என்று ராமநாதபுரம் இளையர்கள் கோரியுள்ளனர்.
பாரம்பரிய வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியத் துவத்தை உணரும் வகையில், என்றாவது ஒருநாள் இதற்கும் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் 'ராம்நாடு கோட்ஸ் பைட்டர்' என்ற பெயரில் சண்டை கிடாக்களை வளர்த்து ஆளாக்கி, பயிற்சி அளித்துவருவதாக ராமநாதபுர கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியுள்ளனர்.