சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே இருக்கும் பேபி அணையை ஒட்டி உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசாங்கம் அனுமதி அளித்து இருப்பதாகவும் அதற்காக தான் நன்றி கூறுவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
கேரளாவின் காட்டுவளத் துறை அமைச்சு அந்த அனுமதியைக் கொடுத்து இருப்பதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் அந்தக் கடிதத்தைப் பார்த்து தான் அதிரிச்சி அடைந்துவிட்டதாகவும் அப்படி எந்தவோர் அனுமதியும் கொடுக்கப்படவில்லை என்றும் கேரள காட்டுவளத் துறை அமைச்சர் ஏ கே சசிந்திரன் அதிர்ச்சி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
பேபி அணையை வலுப்படுத்தவும் அந்தப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்தவும் அந்த மரங்களை வெட்டுவதற்கான தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கான அனுமதியை கேரள முதல்வர் வழங்கி இருக்கிறார் என்று தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதித்து பேபி அணையைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டால் புதிய ஓர் அணைக்கட்டை கட்டுவதற்கான கேரளாவின் கோரிக்கை பலவீனமாகிவிடும் என்று கேரள தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணைக்கட்டை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இப்போது இருந்து வருகிறது. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தால் அதன் தாக்கம் உச்சநீதிமன்ற வழக்கில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
பேபி அணை அமைந்துள்ள இடம் புலி காப்பகமாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு சுற்றுப்புறக் காட்டு வள அமைச்சும் தேசிய வனவிலங்குக் கழகமும் அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேரள அதிகாரி ஒருவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.