கட்ச்: இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்குப் போதைப்பொருள் கடத்தல் மூலம் பண விநியோகம் நடப்பதாகத் தெரியவந்துள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 2,988.21 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது.
அதன் தொடர்பில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவாயின.
அந்த வழக்கை அமலாக்கத் துறை, வருவாய்த் துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை விசாரித்து வந்தன.
அந்நிறுவனம் துறைமுகத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம் அளித்தது என்பதால் இந்த விவகாரம் பயங்கர வாதச் செயல்களை விசாரிக்கும் மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகவையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப் பட்டது.
என்ஐஏ விசாரணையிலான இந்த வழக்கில், கடந்த அக்டோபர் 13ல் ஆஷி நிறுவனத்துடன் தொடர்புடைய டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஐந்து கிடங்குகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதற்கு முன்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் விஜயவாடாவிலும் சோதனைகள் நடந்தன.
இதுவரை இந்த விவகாரத்தில் எட்டுப் பேர் கைதாகி உள்ளனர்.
அவர்களில் நால்வர் ஆப்கானிஸ்தானையும் ஓர் இளம்பெண் உஸ்பெஸ்கிஸ்தானையும் சேர்ந்தவர்கள்.
சிறையிலுள்ள அவர்கள் விசா அனுமதியின்றி இந்தியாவில் இருந்தவர்கள் எனத் தெரிந்துள்ளது.
ஆப்கானிஸ்தானியர்களுள் நொய்டாவில் வசித்து வந்த ஒருவருக்கு முக்கியப் பங்கிருப்பதாகத் தெரிந்துள்ளது.
இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, 'துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டு இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
இதன் லாபத்தொகை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர்கள் கூறினர். இதன் பின்னணியில் உள்ள வெளிநாட்டுப் பயங்கர வாதிகளுக்கும் இந்தியாவில் பலருக்கும் மறைமுக தொடர்புகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக வும் அவை குறிப்பிட்டுள்ளன.

