சென்னை: தமிழகத்தில் பரவி வரும் டெங்கிக் காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இக்குழுவினரை தாம் சந்தித்துப் பேசியதாகவும் மாநிலத்தில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், திட்டமிட்டுள்ள சுகாதாரப் பணிகள் குறித்த விவரங்களை மத்திய குழு தெரிந்துகொள்ளும் என்றும் அதற்கேற்ப சில ஆலோசனைகளை அக்குழு முன்வைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
நடப்பாண்டில் தமிழகத்தில் இதுவரை 493 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னையில் இருபது பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
"காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 30 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் 121,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
"டெங்கிக் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய குழுவிடம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
கொரோனா நிலவரம்
நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக மேலும் 841 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மேலும் ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.