சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடந்து முடிந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு ஏற்ப இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் உள்ள 47 முதுநிலை திருக்கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோவில் வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"மேலும் 489 முதுநிலை அல்லாத திருக்கோவில்களுக்குப் பணியாளர்களும் இந்து சமயஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
"அதற்கான கணக்கெடுப்பு பணிகள் திருக்கோவில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
"இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்," என்று அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.