சென்னை: தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின்போது மோசடி செயல்களில் ஈடுபட்ட 191 பேரைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வாணையம் நடத்திய 'குரூப் 4' பிரிவுக்கான தேர்வில் 1.6 மில்லியன் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியானபோது, ராமேசுவரத்தில் உள்ள மையத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் மட்டும் முதல் நூறு இடங்களைப் பெற்றதாகத் தெரியவந்தது.
இதையடுத்து மிகப்பெரிய அளவில் மோசடி நிகழ்ந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடி போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின்போது 'குரூப் 4' தேர்வு தொடர்பாக 95 தேர்வர்கள், தேர்வாணைய ஊழியர்கள் இருவர் உள்ளிட்ட 115 பேரும் 'குரூப் 2' தேர்வு மோசடி தொடர்பாக 59 பேரும் கைதானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு தேர்வில் நடந்துள்ள மோசடி தொடர்பாகவும் 17 பேர் கைதாகி உள்ளதாக சிபிசிஐடி தரப்பு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுவரை 191 பேர் கைதாகியுள்ளனர்.