சென்னை: கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக நீடித்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் நிரம்பியுள்ளன.
பல ஆறுகளில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் நான்காயிரம் ஏரிகளும் நூற்றுக்கணக்கான குளங்களும் நிரம்பியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரில் மிதக்கும் விளை நிலங்கள்
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தளவானூர் தடுப்பணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பையூர், சேத்தூர் பகுதிகளில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கடலூரில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 30,000 ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் சம்பா பயிர்களுடன் நீரில் மிதக்கின்றன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு
காரைக்கால் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழை பதிவாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 30 சென்டிமீட்டர் மழை பெய்தது. அதன் பிறகு இப்போதுதான் 25 சென்டிமீட்டர் அளவிலான மழை பெய்துள்ளது.
மழை மீட்டெடுத்த ஆறு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் விருசுழியாறு வற்றிப்போனது. 15 ஆண்டுகளாக அந்த ஆற்றுப்பாதை பாலைவனம் போன்றே காட்சியளித்த நிலையில், அண்மைய மழை விருசுழியாறு ஆற்றை மீட்டெடுத்துள்ளது.
இந்த ஆறு மூலம் 72 கண்மாய்கள் பயன்பெறும். இதன்மூலம் 6,000 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின் அங்குள்ள எழுவன்கோட்டை அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதை ஏராளமானோர் கண்டு களித்து வருகின்றனர்.
4,000 பாசன ஏரிகள் நிரம்பின
இதற்கிடையே தமிழக அரசின் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள சுமார் 4,000 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளன.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 14,138 பாசன ஏரிகளில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி 3,945 ஏரிகள் நூறு விழுக்காடு கொள்ளளவை எட்டியதாகவும் மேலும் 2,874 பாசன ஏரிகள் 76% முதல் 99% வரை கொள்ளளவை எட்டி வேகமாக நிரம்பி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிரம்பியது வைகை அணை
வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதையடுத்து அணை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது என்றும் அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 31ஆவது முறையாக நிரம்பியுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
மூன்று மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தீவிரம்
இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை சற்றே தணிந்தது. இதையடுத்து, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.