சேலம்: தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதர இடங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்து இருப்பதாகத் தெரிவிக்கப்படும் சட்டவிரோத கனிமவளக் கடத்தல்கள் பற்றி சிபிசிஐடி போலிசார் பெரிய அளவில் புலன்விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.
சேலம் சிபிசிஐடி போலிஸ் அதிகாரிகள் சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி, கூசமலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
சேலத்தில் உள்ள அரசு நிலங்களில் அனுமதியின்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும் அதைச் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை சிபிசிஐடி இயக்குநரிடம் பொதுமக்களில் ஒருவர் புகார் தெரிவித்து இருந்தார். அதற்கான ஆதாரங்களாக பல புகைப்படங்களையும் காணொளிகளையும் மனுவுடன் சேர்த்து அவர் அனுப்பினார்.
கொள்ளையைத் தடுக்கவேண்டிய கனிமவளம் மற்றும் வருவாய்த்துறையினர், குற்றவாளிகளுக்கு எடுபிடிகளாக பணிபுரிவதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து புலன்விசாரணையைத் தொடங்கும்படி சிபிசிஐடி இயக்குநர் உத்தரவிட்டார். அதை ஏற்று அதிகாரிகள் புலன்விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

