ரூ.9,000க்கு விற்ற நூல்
ரூ.14,000; கிடுகிடு உயர்வு
சேலம்: நூல் சிப்பம் ரூ.9,000க்கு விற்ற நிலையில், ஐம்பது நாட்களில் ரூ.14,000ஆக உயர்ந்தது.
இதேபோல் நூல் விலை தொடர்ந்து உயர்ந்தால் விசைத்தறிக் கூடங்களை மூடும் நிலை ஏற்படும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறியை நம்பி ஐம்பது லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கைத்தறியை நம்பி ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் உள்ளனர்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி நடக்கிறது. அண்மை காலமாக ஜவுளி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலை அடிக்கடி ஏறி வருகிறது.
தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் வீட்டில் மின்கசிவு; பயங்கர தீ விபத்து; பாதிப்பு
சென்னை: சென்னையில் கடும் மழை தொடரும் வேளையில், ஓட்டேரியில் உள்ள ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக பெரிய அளவில் தீ மூண்டு ரொக்கம் உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை காரணமாக மின் தடை ஏற்பட்டு பிறகு திடீரென்று மின்சாரம் வந்ததும் குளிர்சாதனம் வெடித்து தீ பரவியதாக சுரேஷ்பாபு, 40, என்ற வீட்டின் உரிமையாளர் கூறினார். தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக-கேரள முதல்வர்கள் பேச்சு; விரைவில் தேதி முடிவு
சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தும் தேதி, நவம்பர் 14ஆம் தேதி நடக்க உள்ள தென்மாநில முதல்வர் மாநாட்டின் போது முடிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நவம்பர் 14ஆம் தேதி நடக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்கிறார். அப்போது அந்த முடிவு எடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ரூ.2,500 ஆக உயர்த்த கோரிக்கை
சென்னை: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். பெருமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக உரிமை வழக்கு:
சசிகலா தரப்பு இன்று வாதம்
சென்னை: அதிமுக, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவையும் தினகரனையும் முறையே பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது.
அதை எதிர்த்து சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இப்போது நடந்துவருகிறது. வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முடிவடைந்தது.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரின் வழக்கறிஞர் முன்னிலையாகி வாதாடினார். அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று அவர் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணை இன்று நடக்க உள்ளது.
டாஸ்மாக் 4 நாட்கள் மூடல்
தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 19ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

