சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கிக் காய்ச்சலுக்கான தனிப்பட்ட ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
டெங்கிக் காய்ச்சலால் நெல்லை, தென்காசி மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
சென்னையில் கொரோனா, டெங்கி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூன்று நாட்களில் மாநிலம் முழுவதும், 1,858 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 965 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் 74,283 பேர் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலத்தில் 100% கொவிட்-19 முதல் தடுப்பூசி இலக்கு இம்மாதத்திற்குள் நிறைவேற வேண்டும் என்று முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தரார்.
மழைக்காலத்துக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 108 மருத்துவ வாகனச் சேவையும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.
மாநிலத்தில் கொரோனா தொற்றும் மரணமும் மேலும் குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.அன்றாட புதிய தொற்று 1,000க்கும் கீழ் உள்ளது. மரணங்கள் 10க்கும் கீழே உள்ளன.