சென்னை: மழை பாதிப்பால் காய்கறிகளின் வரத்து இல்லாமல் மாநிலம் எங்கும் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், இவற்றின் விலையைக் குறைக்கவும் நடமாடும் காய்கறிக் கடைகளுக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம், இப்போது மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.
மழையின் தாக்கத்தால் விவசாயிகளால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதேபோல் நடமாடும் காய்கறி வண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கிருமி பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் 48,000 நடமாடும் காய்கறிக் கடைகள் பத்தே நாட்களில் அமைக்கப்பட்டன.
அதேபோன்று காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட கூட்டுறவுத்துறை மூலமாக அரசு இப்போதும் நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.