சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், சென்னையில் 200 இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுத் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்மழை காரணமாக மலேரியா, டெங்கி போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க, தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, இம்முகாம்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் வழங்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா பாதிப்பு, கனமழை வெள்ளப் பாதிப்பால் அடுத்தடுத்து தங்களது வாழ்வா தாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் ெபரிதும் பயன் அடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நலப் பாதிப்புகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடைேய, சென்னையில் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார். வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
15 மாவட்டங்களில் 12,000 பேர்
தமிழகத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 229 நிவாரண முகாம்களில் 12,000க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஐந்து நாள்கள் மழை தொடரும்
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஐந்து நாள் களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.