தருமபுரி: விடாது ெபய்து வரும் கனமழை காரணமாக, முத்தம்பட்டி மலைப்பாதையில் பாறைக் கற்கள் திடுதிடுவென்று சரிந்து விழுந்த தில் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் தடம் புரண்டது.
ரயிலில் 2,348 பயணிகள் பயணம் செய்ததாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மலையில் இருந்து உருண்ட பாறைகள் ஓடும் ரயிலில் மோதியதால் விரைவு ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. நேற்று அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் பயங்கர சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு எழுந்துள்ளனர். இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது," என தென்மேற்கு ரயில்வே விவரம் ெவளியிட்டுள்ளது.
"தமிழ்நாட்டின் தோப்பூருக்கும் சிவாடிக்கும் இடையில் முத்தம்பட்டியில் விபத்து நடந்துள்ளது. ரயிலில் பயணம் செய்த 2,348 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை," என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக 'த நியூஸ் மினிட்' ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
"பாறாங்கற்களை அகற்ற புல்டோசர் பயன்படுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து தோப்பூருக்கும் பெங்களூருக்கும் பயணிகளை அழைத்துச் செல்ல ஐந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அத்துடன், பயணிகளுக்கு குளிர்பானம், தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
வனப்பகுதி என்பதால் இப்பகுதிகளில் இயக்கப்படும் ரயில்கள் மெதுவாகவே கடந்து வருவதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்மழையிலும் தடம் புரண்ட பெட்டிகளைச் சரிப்படுத்தும் பணியிலும் பாதை சீரமைப்புப் பணிகளிலும் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

