செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2187686c-26cc-4976-90bd-3b32b78c14fd
-

ஒருபுறம் திருமண விருந்து; மறுபுறம் தடுப்பூசி போடும் பணி

ஒருபுறம் திருமண விருந்து நடக்கிறது. மறுபுறம் தடுப்பூசி போடும் பணி தொடர்கிறது. படம்: தமிழக ஊடகம்

நாகர்கோவில்: திருமண வரவேற்பு விருந்துக்கு வருகை அளித்த உறவினர், நண்பர்களுக்கு ஒருபுறம் உணவு பரிமாறப்பட்ட அதேவேளையில், மறுபுறம் தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி, தாணுமாலயன்புதூர் பகுதியில் தடுப்பூசி போடாதவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி போடுவதற்கு இம்மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தாதிகளும் தன்னார்வலர்களும் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போட்டு வரும் நிலையில், திருமண விருந்து நடைபெறும் இடத்திற்கும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர். இதனால், தங்கள் இருப்பிடம் தேடி தடுப்பூசி வந்ததே மகிழ்ச்சிதான் என்று கூறி ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

1.1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்திறங்கிய விமானங்களில் வந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பயணிகளிடம் 48 லட்ச ரூபாய் மதிப்பிலான 1.1 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குவைத், சார்ஜா, இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

மன்னரின் 1036வது சதய விழா

தஞ்சாவூர்: தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

உலகமே வியக்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று, ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பழங்குடியின, இருளர் சமூகத்தினர் 30 பேருக்கு வீட்டு மனைப் பட்டா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கத்தில் வசிக்கும் பழங்குடியின, இருளர் சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வீடு வாசலின்றி தவித்து வந்த 30 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். அத்துடன், கனமழை, வெள்ளம் காரணமாக முகாமில் தங்கியிருந்த மக்களுக்கும் அவர் நிவாரண உதவிகளை வழங்கினார்.