மதுரை: மதுரை அண்ணா நகரில் ரவுடி குருவி விஜய் என்பவரின் காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்துள்ளனர் போலிசார். இவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை அண்ணா நகரில் உள்ள மீனவ சங்க கட்டடம் அருகே நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் குருவி விஜய். அப்போது அந்தப் பெண் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்துக்குத் தகவல் கூறினர்.
இதையடுத்து, அங்கு வந்த போலிசாரைக் கண்டதும் ரவுடிக் கும்பல் அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளது.
ஆனால், கும்பலை விடாமல் போலிசார் துரத்த, அவர்கள் போலிசாரை கட்டைகளாலும் கற்களாலும் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
இதையடுத்து, ரவுடிக்கும்பலை விரட்டிச் சென்ற போலிசார் ஒரு கட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விஜய் சரிந்து விழுந்தார். இதையடுத்து, ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் பிடித்த போலிசார், அண்ணாநகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
குருவி விஜய்க்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு ஆளான பெண்ணிடமும் ரகசிய விசாரணை நடந்ததாகத் தகவல்.