சென்னை: கொவிட்-19 கிருமி பாதிப்பு தற்போது ஓரளவு கட்டுக்குள் வரத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்குக் கூடுதல் விமானங்களை இயக்க அனுமதிக்கவேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சலில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை சரியத் தொடங்கி உள்ளதை அடுத்து, இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் பல்வேறு நாடுகளும் விலக்கி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா அலைகளின் கடும் தாக்கம் காரணமாக பல நாடுகளில் இருந்தும் பயணிகள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குக் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்பட்டன. ஆனால், சென்னையில் இருந்து விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.
"தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்ல காத்திருப்பதால் சென்னை, திருச்சியில் இருந்தும் கூடுதல் விமானங்களை இயக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்று வைகோ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இந்தியப் பயணிகள் செல்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நவம்பர் 15 முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன.