சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் தேங்கிய தண்ணீர் இன்னும் வடிந்தபாடில்லை. இதனால், தங்கள் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை உடனடியாக வெளியேற்றக் கோரி சென்னை மாநகர மக்கள் பல்வேறு இடங்களிலும் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்காலத்தில் நாங்கள் இதே துன்பத்தைத்தான் அனுபவித்து வருகிறோம். எந்தவொரு நோய்த்தொற்றும் பரவுவதற்கு முன்னர் தேங்கிய நீரை உடனடியாக அகற்றுவதோடு, எங்களின் துயர் துடைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவேண்டும்," என்று போராட்டம் நடத்திய மக்கள் வலியுறுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டை, திருவள்ளூர் சாலையில் மழைநீரை அகற்றக் கோரி திடீர் போராட்டம் நடத்திய பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் மின்விநி யோகத்தையும் உடனடியாக சீரமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதேேபால், தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேற்கு தாம்பரம், பாரதி நகர், கிருஷ்ணா நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரை நகராட்சியினர் அப்புறப்படுத்துவதில் காலம் கடத்துவதாக குற்றம்சாட்டிய மக்கள், முடிச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அங்கு வந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் மக்கள் தங்களது கோரிக்கைகளைக் கூறினர்.
மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதையடுத்து, பொதுமக்கள் சாலைமறியலைக் கைவிட்டனர்.
சென்னையில் மழை நின்று, வெயில் தலைகாட்டிய போதிலும் தண்ணீர் வடியாமல் உள்ளதால், தொடர்ந்து ஒருவாரமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரை 539 மோட்டார், ராட்சத பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்பு, போலிஸ் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடலூர், மயிலாடுதுறையைத் தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் நேற்று மழை பாதிப்பை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.