தேவகோட்டை: தேவகோட்டை அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் கால் இடறி விழுந்து காப்பாற்றும்படி அலறிய ஒன்பது வயது தங்கை ஹர்ஷினியின் உயிரை சமயோசிதமாகச் செயல்பட்டு அவரது அக்கா தேவிஸ்ரீ காப்பாற்றி உள்ளார்.
இதனால் தேவிஸ்ரீக்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மரணக் கிணறுகளாக மாறுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள வெட்டுக்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மூன்று பெண் குழந்தைகளில் தேவிஸ்ரீ, 14, ஹர்ஷினி, 9, ஆகிய இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஓடைப் பகுதியில் ஆடு மேய்த்து விட்டுத் திரும்பினர்.
அப்போது, அங்கிருந்த ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த ஹர்ஷினி உதவி கேட்டு கத்தினார்.
தேவிஸ்ரீ ஓடி வருவதற்குள் ஹர்ஷினியின் உடல் குழிக்குள் சென்று தலையும் கையும் மட்டுமே வெளியில் தெரிந்தது. தேவிஸ்ரீ சாமர்த்தியமாகச் செயல்பட்டு தங்கையின் தலைமுடியையும் கையையும் பிடித்துக்கொண்டு கூச்சலிட, அருகில் இருந்தோர் ஓடிவந்து ஹர்ஷினியைக் காப்பாற்ற உதவினர்.
இதற்கிடையே, வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆழ்துளைக் கிணற்றை முழுவதுமாக மண், மரங்களைப் போட்டு மூடினர்.
சிறுமி ஹர்ஷினி பிபிசி தமிழ் ஊடகத்திடம் பேசியபோது, "நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறேன். ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது கல்லில் கால் பட்டு அருகே இருந்த குழிக்குள் விழுந்துவிட்டேன். நெற்றி அளவுக்கு குழிக்குள் புைதந்த என்னை அக்காதான் எனது தலைமுடியைப் பிடித்து இழுத்து மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றினார். அவரால்தான் உயிர் பிழைத்தேன்," என்றார்.