செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
83127d15-ca5a-499d-9673-aa365295f8a0
-

102 மொழிகளில் திருக்குறள்

புதுடெல்லி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 102 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ள நிலையில், இந்நிறுவன இயக்குநர் சந்திரசேகர், "தற்போது 102 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி தொடங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவடையும்போது தமிழர்களின் அறச்சிந்தனையை உலகமே வியக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தலைமறைவு

நாமக்கல்: பணமோசடி வழக்கு தொடர்பில் பிணை கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மூன்றாவது முறையாக நாமக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதிமுக முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் இருந்து ரூ.76.50 லட்சம் பணத்தைப் பெற்று தனது உறவினர் சரோஜாவிடம் கொடுத்ததாக குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல்நிலையத்தில் அளித்திருந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று எட்டாவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற உள்ளது. இன்னும் முதல்கட்ட தடுப்பூசியைக்கூட போட்டுக்கொள்ளாத மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி போட தாதியர், ெதாண்டூழியர் கொண்ட குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.

சுடு நீரைக் குடிக்க அறிவுறுத்து

சென்னை: நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்தவேண்டும். கொதிக்கவைத்த தண்ணீரை அருந்துதல் நல்லது. தொற்றுநோய் வராமல் தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரால் கழுவவேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், முதல்வர் சிக்கினர்

கோவை: கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாகவும் பதிவான வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரைத்தொடர்ந்து, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், சக மாணவிகளின் உறவினர்கள், பெற்றோர் என பலரும் மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.