தீவுகளான 200 கிராமங்கள்; தண்ணீரில் 50,000 வீடுகள்; மழை தொடரும் என கணிப்பு
கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையைப் பதம் பார்த்த வடகிழக்குப் பருவமழை, இப்போது தென் தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 100மி.மீ. மழை பெய்ததால் மாவட்டமே மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்மழை காரணமாக அங்கு பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து தீவுகளாக மாறிவிட்டதாகவும் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்படுவதும் வெள்ளமும் ஏராள மான கிராமங்களுக்குள் புகுந்துவிட்டது. ஆறுகளும் கால்வாய்களும் உடைப்பெடுத்து தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்துவிட்டது.
வெள்ளத்தில் தோப்புகளும் தோட்டங்களும் விளைநிலங்களும் மூழ்கிக்கிடப்பதாகவும் கூறப்படுகிறது. பல வீடுகள் இடிந்துவிட்டன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரயில்கள் ரத்தாயின. வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர், இருக்க இடம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால் மக்கள் அதிகாரிகளின் துணையுடன் வீட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். 2,000 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி கருத்து கூறிய ஒருவர், ''மூன்று நாள் மழைக்கே கன்னியாகுமரி, தண்ணியாகுமரியாக மாறிவிட்டது,'' என்றார்.
இந்தநிலையில், அந்த மாவட்டத்தில் மேலும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தமிழக அரசு மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவிலிலும் திருநெல்வேலியிலும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து இருப்பதாகத் தகவல்கள் கூறின.
இவ்வேளையில், அந்தமான் அருகே புதிதாக உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அங்குமிங்குமாக மழை பெய்யும் என்றும் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியது.

