சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று குறைந்து வருகிறது. என்றாலும் கோவை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறின.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 809 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் 14 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறின. இந்த மரண எண்ணிக்கை முதல் நாள் வெள்ளிக்கிழமை வெறும் எட்டாக இருந்தது.
இதனிடையே, மாநிலத்தில் இப்போது நடப்பில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் எட்டாவது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் குறைந்தபட்சம் 200,000 ஊழியர்களும் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநிலத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் 1.6 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்பதால் இம்மாத முடிவில் குறைந்தபட்சம் ஓர் ஊசியாவது அவர்களுக்குப் போட்டுவிட வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதேவேளையில், 70 லட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடவேண்டிய நிலை இருக்கிறது. மழையும் விழாக்காலமும் தடுப்பூசி இயக்கத்திற்கு உகந்ததாக இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள்.