கோவை: ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக 17 வயது மாணவி தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் பெங்களூருவில் பதுங்கி இருந்த தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் போலிசிடம் பிடிபட்டார்.
தேடப்பட்டு வந்த மீரா ஜாக்சன், 52, என்ற அந்த ஆசிரியை பெங்களூருவில் கைது செய்யப்பட்டு போலிசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல முறை புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மீரா ஜாக்சனுக்கு எதிராக போக்சோ சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்படும் சின்மயா வித்யாலயா என்ற பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மிதுன் சக்கரவர்த்தி, 35, என்ற ஆசிரியர் கைதாகி ஏற்கெனவே சிறையில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
மாணவி எழுதிய கடிதமும் அவர் பயன்படுத்திய கைபேசியும் போலிஸ் புலன்விசாரணையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மாண்ட மாணவியின் குடும்பத்தாரை தமிழக கல்வி அமைச்சர் பொய்யாமொழி நேரே சென்று சந்தித்தார்.
இந்த விவகாரத்தில் சந்தேக நபர்கள் எல்லாரும் கைதாகி இருப்பதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு உதவி வழங்கும் என்றும் தெரிவித்த அமைச்சர், தமிழக மாணவ, மாணவியர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உதவிக்கு 14417 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

