செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a2289ded-d4eb-423b-9ca3-7a50113c39a2
-

50% இலவச வேட்டி, சேலை தயார்

ஈரோடு: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை அரசாங்கம் விநியோகிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விசைத்தறி கூடங்களில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி பாதி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நூல் தட்டுப்பாடு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்திப் பணி சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைச் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

2,359 கோயில் குளங்கள் நிரம்பின

ஈரோடு: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக மொத்தம் 2,359 கோயில் குளங்கள் நிரம்பியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட திருச்சி திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் நந்தி கோயில், தென் மாவட்டங்களான மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளங்கள், குமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில், பகவதியம்மன் கோயில் குளங்கள் பலவும் அவற்றில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை 41வது ஆண்டாக முழுக் கொள்ளளவை எட்டியது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41வது ஆண்டாக அது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

பணியின்போது முத்தம்; போலிஸ் அதிகாரி வேலை பறிபோனது

கோவை: கோவையில் பொது இடம் ஒன்றில் சீருடையில் பணியில் இருந்த திருமணமான போலிஸ்காரர் ஒருவருக்கு அவரின் உறவுப் பெண் ஒருவர் முத்தம் கொடுத்ததைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து அந்தப் போலிஸ் அதிகாரி பதவி இழந்தார்.

இடைக்காலமாக பதவி இழந்த கோவை ஆயுதப்படை பிரிவு போலிஸ்காரரான பாலாஜி, 32, என்ற அந்த அதிகாரி, காதல் திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. பாலாஜியை முத்தமிட்டது அவரது உறவினர் பெண் என தெரியவந்துள்ளது.

'விரைவில் விசாரணைக் குழு'

சென்னை: சென்னையில் கடந்த ஆட்சியின்போது மழை நீர் வடிகால் அமைத்ததில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட முதல்வர் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடப்பதாகக் கூறினார்.