சென்னை: இனிமேல் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் நீங்கலாக, இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வரும்போது கொரோனா தொற்றில்லை என்ற சான்றிதழைக் காட்டத் தேவை யில்லை. ஆனால், 'இ-பதிவு' முறை அவசியம் என்று அரசு கூறியுள்ளது.
இதுவரை, விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழைக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், கொரோனா தொற்றில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைக் கொண்டு வருவதை அரசு கட்டாயப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இப்போது இந்த நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, கேரள மாநிலத்தை தவிர்த்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு கொரோனா சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அவசியமில்லை என்றும் ஆனால், தமிழகத்திற்கு வருவதற்கான இ-பதிவு அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்ல கொரோனா தொற்றில்லை சான்றிதழ் அவசியமாகும்.
கிருமிப் பரவல் தமிழகத்தில் கணிசமாக குறைந்துள்ளதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதும் சான்றிதழ் தளர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

