ஆறு அடி நீள சாரைப் பாம்பு மீட்பு
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தங்களது வீட்டில் உள்ள கிணற்றில் ஏறத்தாழ ஆறு அடி நீளமுள்ள சாரைப் பாம்பு ஒன்று தப்பிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக திருவூர் தீயணைப்புத் துறையினரிடம் தகவல் கூறினார். இதையடுத்து, கிணற்றுக்குள் இறங்கி சாரைப் பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினர் அதை அருகில் உள்ள காட்டுக்குள் விட்டனர்.
படம்: தமிழக ஊடகம்
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க முதல்வர் வலியுறுத்து
திருப்பதி: தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்கவேண்டும் என மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் முதல்வரின் உரையை அமைச்சர் பொன்முடி வாசித்தபோது, தமிழை ஆட்சி மொழியாகவும் திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ள நிலையிலும், கடந்த ஞாயிறன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற எட்டாவது தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 32,498 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி முகாமை அடுத்து, நேற்று திங்கட்கிழமை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாஜக: திமுக அரசு தவறிவிட்டது
சென்னை: மழைநீர் தேங்கி நிற்காமல் வடியும் வகையில் வடிகால் கட்டமைப்புப் பணிகளைச் சீரமைத்து வெள்ளம் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். ஆனால், திமுக அரசு அதைச் செய்யத் தவறிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜக தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவியும் குற்றம்சாட்டி உள்ளனர். வருங்காலத்திலாவது எந்த ஒரு பாதிப்பும் வராமல் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மூவர் உயிரிழப்புக்கு விஷம் கலந்த மதுவே காரணம்: ஒருவர் கைது
கோவை: கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மது அருந்திய மூவர் ஆங்காங்கே அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் வகையில் செய்திகள் வெளிவந்தன. மதுவில் கலப்படமா? இல்லை நண்பர்களுக்குள் நடந்த சண்டையில் இப்படி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து மது அருந்தி உயிரை விட்டுள்ளனரா? என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், நண்பர்கள் மூவரும் உயிரிழக்க நஞ்சு கலந்த மதுவே காரணம் என தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக மதுவில் நஞ்சைக் கலந்து கொடுத்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

