வேலூர்: வேலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஒன்று மலையடி வாரத்தில் உள்ள வீட்டின் மீது உருண்டு விழுந்ததில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர்.
மேலும் ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்தப் பாறையின் எடை 40 டன்னுக்கும் அதிகமாக இருக்க லாம் என்றும் கூறப்படுகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறை ஒன்று மலையடிவாரத்தில் வசித்து வரும் பிச்சாண்டி என்பவரின் வீட்டின் மீது உருண்டு வந்து விழுந்ததில் வீட்டில் இருந்த மூவர் இடிபாடுகளில் சிக்கினர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிக்கி காய மடைந்த பிச்சாண்டியின் மனைவி ரமணியை, 45, முதலில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து 9 மணிநேர தேடலுக்குப் பிறகு ரமணி அம்மாளின் மகள் நிஷாந்தி, 24, சடலம் மீட்கப்பட்டது. காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் மீட்டனர்.

