காவலருக்கு குவியும் பாராட்டு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் திருக்கோவில் அருகே உள்ள உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை பாதுகாப்புக் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அவரை பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
உணவகத்தில் இருந்த அனைவரும் உணவகத்தை விட்டு வெளியே ஓடி வந்த நிலையில், கோவில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ரஜினி முத்து முதலில் உணவகத்தின் மின்சாரத்தைத் துண்டித்தார்.
பின்னர், எதிரே உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்த தீயணைப்பு பாதுகாப்பு உபகரணத்தை எடுத்து சாமர்த்தியமாக மளமளவென பிடித்து எரிந்த தீயை அணைத்தார். அப்போது உணவக ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் உதவிக்கு வர தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பு சாமர்த்தியமாகச் செயல்பட்ட காவலர் ரஜினி முத்துவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
நகைக்காக பாட்டியைக் கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடை பகுதியைச் சேர்ந்த கௌரி என்ற மூதாட்டியை அவரது பேரன் கோபிநாத் என்பவர் கொலை செய்து அவர் அணிந்திருந்த 3.5 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளார். ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கோபிநாத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஜயன் விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதா வழக்கு விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மரணம்
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரியாக விளங்கிய நல்லம்ம நாயுடு, 83, (படம்) உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை பெரவள்ளூரில் வசித்து வந்த அவர், தனது இல்லத்தில் நேற்று காலை (நவம்பர் 16) உயிரிழந்தார்.
1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட இவர், தனது நேர்மையான விசாரணையின் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சிறைக்கு அனுப்பினார்.
சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது, அதிபர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
நல்லம்ம நாயுடுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற தேர்தல் பணிகள் தீவிரம்
சென்னை: கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
மேயர், சேர்மன், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை வரையறுப்பது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மகளிர், பட்டியலினத்தவர்கள், பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் மீண்டும் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

