புதுக்கோட்டை: விராலிமலையில் 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவரான மாதவன், 27, விராலிமலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது மாணவியை மாதவன் அடித்து, தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, கீரனூர் அனைத்து மகளிர் போலிசார் மாதவனைக் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், நீதிபதி முனைவர் சத்யா அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
"வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த மாதவனுக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும் சிறுமியை தாக்கியதற்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டுகாலம் கடுங்காவல் தண்ட னையும் விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இச்சம்பவம் நடந்த நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்ற வாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

