நாகப்பட்டினம்: தங்களது உயிருக்கு மகன்களாலும் பேரன்களாலும் ஆபத்து உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி நாகப்பட்டினம் காவல் அலுவலகத்தில் ஒரு மூத்த தம்பதியர் மனு அளித்தனர்.
நாகை மாவட்டம், கொந்தகை யைச் சேர்ந்தவர் சிங்காரவேலு, 92. இவரது மனைவி மாணிக்கம், 80. இருவரும் நாகை எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "எங்களுக்கு துரைராஜ், வீரையன், பழனி, முத்து என நான்கு மகன்கள். அவர்களில், வீரையன் இறந்துவிட்டார். மற்றவர்கள் திருமணமாகி தனியே சென்று விட்டனர். அவர்கள் எங்களைக் கவனிப்பதில்லை.
"மனைவி மாணிக்கத்திற்கு அவரது தந்தை அளித்த இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம். அந்த இடத்தைத் தரும்படி கேட்டு, உயிருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். என் மூன்று மகன்களால் எந்நேரமும் ஆபத்து நேரும் என்பதால், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்," என்று கூறியுள்ளனர்.
மாணிக்கம் கூறுகையில், "மகன்கள் யாரும் எங்களைப் பாதுகாக்கவில்லை. எங்களுக்கு சொந்தமாக சாலையோரம் வீடு உள்ளதால் அதை எழுதித் தர வலியுறுத்தி மகன்களுடன் சேர்ந்து பேரப் பிள்ளைகளும் மிரட்டுகின்றனர்,'' என்றார்.