சென்னை: வடகிழக்குப் பருவமழை யால் கடந்த 11ஆம் தேதி முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விளைபயிர்கள் நீரில் மூழ்கின.
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளும் பல்வேறு கட்சியினரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம், கால்நடை இறப்பு, வீடுகள் சேதம் குறித்து கடந்த ஒருவாரமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்து வந்த அமைச்சர்கள் குழுவினர், நேற்று அந்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.
அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17 லட்சத்து 46,000 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், ஏறக்குறைய 68,652 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அறுவடைக்கு தயாரான நிலையில், சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,038 மதிப்புள்ள இடுபொருள்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழைநீா் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீா் ஆதாரங்கள் பெருக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது.
"வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் விதமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்காததால்தான் மக்கள் வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா்," என எதிா்க்கட்சித் தலைவா் கே.பழனிசாமி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.