தஞ்சாவூர்: 'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப் படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை மும்பையில் இருந்தபடி காணொளி காட்சி வழி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்துவைத்தார்.
தஞ்சை-புதுக்கோட்டை சாலை யில் குழந்தை இயேசு கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள உணவு அருங்காட்சியகத்தை ஏராளமான மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
நெல் நாற்று விடப்படுவது முதல் அரிசியாக அது மக்களுக்கு கிடைப்பது வரையிலான காட்சிகளை மெழுகு, மரப்பொருள்களைக் கொண்டு காட்சிப்படுத்தி இருந்தது பலரையும் கவர்ந்தது.
இந்திய உணவுக் கழகமும் பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து 1,890 சதுர அடி பரப்பளவில் இந்த உணவு அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்காலம் முதல் இப்போது வரையிலான ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்த உழவுக் கருவிகள், விவசாயம், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், இந்திய உணவு முறைகள், மக்களின் பழக்கவழக்கங்கள், தொழில், நீர்நிலைகளில் நீராடுதல் போன்ற வற்றை மெழுகு பொம்மைகளாக நினைவு கூர்ந்துள்ளனர்.
பழங்கால மனிதர்கள் வேட்டையின்போது ஆயுதங்களாகப் பயன்படுத்திய கற்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.