செய்திக்கொத்து

3 mins read
d57a26b0-53db-4cd0-9e8d-c1d19b64d4c7
-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக புதிய கட்டடங்கள்

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வசதி மூலம் நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலா உறவினர்கள் நடத்தும் நிறுவனம் மீது நில ஆக்கிரமிப்பு புகார்

திருச்சி: சசிகலாவின் உறவினர்களால் நடத்தப்படும் நிறுவனம் ஒன்று திருச்சியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று செந்தில் ராஜ்குமார் என்பவர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் விசாரணை ஏதும் நடக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

கைதிகள் தயாரிக்கும் பொருள்களை வைத்து ரூ.100 கோடி ஊழல்

சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலிக்கணக்கு தயாரித்து நூறு கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரும் சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான புகழேந்தி இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் எதையும் பெறவில்லை என்றும் குறைவான அளவிலேயே பெற்றதாகவும் பல்வேறு அரசு அலுவலகங்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட இருவர் கைது: மதுரை போலிஸ் அதிரடி

மதுரை: கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னை காவல்துறையினரிடம் சிக்கினர். இருவரும் மதுரையிலும் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது தெரிய வந்த நிலையில், போலிசார் தேடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், மதுரை தனிப்படை போலிசார் மேற்கு வங்கம் சென்று மால்டா நகரில் பதுங்கியிருந்த வஹதுார்குமான் (32 வயது) திலிப் பிரமன் (37 வயது) ஆகியோரைக் கைது செய்தனர்.

ராஜீவ் கொலை வழக்கு கைதி சிறை விடுப்பில் செல்ல உள்துறை அனுமதி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் தாயாருக்கு கண் அறுவைசிகிச்சை நடைபெற இருப்பதால் அவருக்கு உதவியாக இருக்கும் பொருட்டு சிறை விடுப்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ரவிச்சந்திரனின் தாயார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு சிறை விடுப்பு தொடர்பாக பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், ரவிச்சந்திரன் சிறை விடுப்பில் செல்ல தமிழக உள்துறை அனுமதி அளித்துள்ளது.

பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று சென்னை அருகே கரையைக் கடக்கும்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை அருகே அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.