அரசு அறிவிப்பு: வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்
சென்னை: தமிழகத்தில் இனி வாரந்தோறும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வாரம் இருமுறை தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முகாம்களில் பணியாற்றும் தாதியர்களுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுப்பு வழங்கப்படும் என்றார்.
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட எட்டு மிகப்பெரிய தடுப்பூசி முகாம்கள் மூலம் 1.65 கோடி பேருக்கும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் நான்கு நாள்களில் மட்டும் முந்நூறாயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 789 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,716,421 ஆகும். மாநில சுகாதாரத்துறை அறிக்கையில் இவ் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசு அறிவிப்பு: மாணவர்கள் எதிர்ப்பு
தொற்றுப் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகள் நேரடியாக வகுப்பறைகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளை இணையம் வழி நடத்த வேண்டும் என மாணவர்களில் ஒருதரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை ஏற்க இயலாது என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மதுரை, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கவும் மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.