கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் கரூரைச் சேர்ந்த மருத்துவர் ரஜினிகாந்த் (படம்) கைதாகி உள்ளார்.
தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான ரஜினிகாந்த், தனது மருத்துவமனையில் காசாளராகப் பணியாற்றி வரும் பெண்ணின் 17 வயது மகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியுள்ளார்.
மருத்துவமனை மேலாளர் சரவணன் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மேலாளர் சரவணன் மூலம் 11ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை மருத்துவமனையில் உள்ள தமது அறைக்கு வரவழைத்துள்ளார் ரஜினிகாந்த். அதன் பிறகு தமது பாலியல் சீண்டல் நடவடிக்கையை அரங்கேற்றி உள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் கரூர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், மேலாளர் சரவணன் முதலில் சிக்கினார். மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார்.
இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு ரஜினிகாந்தை போலிசார் கைது செய்தனர்.
மருத்துவர், மேலாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.