மதுரை: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி (படம்) மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி மீது இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளதை அடுத்து, முன் பிணை கோரி ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசு வேலை வாங்கித்தருவ தாகக் கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக விருது நகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
விசாரணையில், ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயநல்லத்தம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய மூவருக்கும் இந்தப் புகாரில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் மீது எட்டுக்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முன் பிணை வழங்கவேண்டும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.