சென்னை: தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு கடந்த மூன்று நாள்களாக துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் இரண்டு போலிசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர் வெளியில் செல்லும்போது போலிசாரும் கூடவே சென்று வருகின்றனர்.
அவரது வீட்டின் பாதுகாப்புக்காக ஐந்து போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நடிகர் சூர்யாவுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், நடிகர் சூர்யாவின் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புப் போட தமிழ் நாடு காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, "நடிகர் சூர்யாவை மிரட்டுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது," என அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.