சென்னை: மாநிலத்தில் கிருமிப் பாதிப்புக்குள்ளாகி கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தவா்களில் 84% போ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவா்கள் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பவர்கள், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பு நேரிட 3.5 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து டாக்டா் செல்வவிநாயகம் கூறுகையில், "மாநில பொதுச் சுகாதாரத் துறை கடந்த ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நிகழ்ந்த கொரேனா மரணங்கள் தொடா்பான விவரங்களை ஆராய்ந்தது. அதில், 84% பேர் தடுப்பூசி போடாததன் காரணமாகவே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
"கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 2,011 போ் கிருமி பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 1,675 போ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள்," என்று கூறியவர், அனைவரும் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலையை நாம் எட்டமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

