செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
644eed44-201c-454e-bee2-55a9c142cd66
-

இரு தொழிலதிபர்கள் மீது நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா புகார்

சென்னை: சென்னை அருகே உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா தம்பதியர் தங்களது ரூ.26 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக இரு தொழிலதிபர்கள் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எம்.எஸ். கெளரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமெண்ட் கம்பெனியில் ரூ.26 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் எனக் கூறினர். இதனை நம்பி ரூ.26 லட்சம் கொடுத்துள்ளோம். ஆனால், முதலீடு செய்தது முதல் மே மாதத்திலிருந்து தற்போது வரை மாதந்தோறும் வழங்கும் தொகையைத் தராமல் ஏமாற்றி வருவதாகவும் பணம் குறித்து கேட்டதற்கு உயிருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

முன்களப் பணியாளர்களான மயானப் பணியாளர்கள்

சென்னை: இடுகாட்டில் பணியாற்றும் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறை பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கெனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்ேபாது மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும் சிறப்புச் சலுகைகளை வழங்கும் வகையிலும் அவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் சேதுபதியை வம்புக்கிழுத்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரூ.1,001 ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என அறிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி அர்ஜுன் சம்பத் இந்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக கோவை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்க வலியறுத்தல்

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் வைப்பதற்குத் தேவையான 20 பொருட்களும் முழுக் கரும்பும் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தனது டுவிட்டர் பக்கப் பதிவில், "கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடன் பொங்கல் பரிசுப் பணமும் முழுக் கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால், திமுக அரசின் அறிவிப்பில் பணத்தைக் காணவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.