சென்னை: தமிழகத்தில் டெங்கி பாதிப்பு ஐந்து மாவட்டங்களில் மட்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதிக அளவில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை 450 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டெங்கி பாதிப்பால் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அங்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கிக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரைக் கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கவேண்டும் எனவும் அவர் சுகாதார அதிகாரிகளிடம் வலியுறுத் தினார்.
"50,000 இடங்களில் கடந்த வியாழனன்று நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 836,796 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 336,468 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 500,328 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்," என்று சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது மா. சுப்பிரமணியன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றார்.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளாா்.

